மதுரை: பேஸ்புக் நட்பில் இருந்தவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த புகாரில், குண்டர் சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதாக ஐகோர்ட் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. திருமணம் ஆன ஒரு ஆணும், பெண்ணும் பேஸ்புக் நட்பு மூலம் திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பெண், தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி பணம் பறித்ததாக அந்த ஆண் மீது போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார், அந்த நபரை கைது செய்தனர். இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி அந்த நபர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: பாலியல் புகாரில் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்தை மீறிய தகாத உறவில் இருவரும் இருந்துள்ளனர். வாழ்க்கையின் அறநெறியில் இருந்து தவறும்பட்சத்தில் மோசமான அனுபவங்கள் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும், வெவ்வேறு தொழிலில் இருந்துள்ளனர். இருவரும் முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். ஒருமித்த பாலியல் உறவு, பலாத்காரம் ஆகாது என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே கூறியுள்ளது. புகார் அளித்த தனிநபரை திருப்திப்படுத்த சட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்று இருக்கிறார்கள். இந்த வழக்கில் அதிகார துஷ்பிரயோகம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
சட்டம்-ஒழுங்கை காக்க குண்டர் சட்ட கைது நடவடிக்கையை சுலபமான வழியாக அதிகாரிகள் வைத்துள்ளனர். இதனால் அதிக பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தவிர்க்க வேண்டும். சட்டம் வழங்கியுள்ள ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்க வேண்டும். எனவே, குண்டர் சட்ட கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கையாக வெளியிட வேண்டும். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
The post பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.