×

பேரூராட்சி துணை தலைவியிடம் கார் வாங்கி தருவதாக ₹12 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, மே 3: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி மாலினி(45). பேரூராட்சி துணை தலைவியாக உள்ளார். இவர் கடந்தாண்டு கார் வாங்குவதற்காக, கிருஷ்ணகிரியில் உள்ள ஷோரூமிற்கு சென்றார். அப்போது, அவர் எதிர்பார்த்த கார் அங்கு இல்லை. இதையடுத்து அந்த ஷோரூமில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை ரோட்டில் உள்ள ஆனந்த் நகரை சேர்ந்த குருபிரசாத்(29) என்பவர், மாலினியிடம் பேசியுள்ளார். அப்போது மாலினி எதிர்பார்க்கும் கார், காஞ்சிபுரம் ஷோரூமில் உள்ளது என்றும், அதனை தான் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 17.9.2023 அன்று, மாலினி ₹1 லட்சத்தை குருபிரசாத்திடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர், ஒரு வாரம் கழித்து மீண்டும் மாலினியிடம் பேசிய குருபிரசாத், மேலும் பணம் வேண்டும் என கூறியுள்ளார். அதன் பேரில், சார் பதிவாளர் அலுவலகம் எதிரே வந்த குருபிரசாத்திடம், மாலினி ₹2 லட்சம் கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான ரசீதையும், குருபிரசாத் கொடுத்துள்ளார். அவ்வாறு பணம் வேண்டும் என சுமார் ₹12 லட்சத்தை குருபிரசாத் வாங்கினார். ஆனால், அதற்கான ரசீது எதுவும் கொடுக்கவில்லை. மாலினி ரசீது கேட்ட போது, காரை டெலிவரி செய்யும் போது, கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், நீண்ட நாட்களாகியும் அவர் கூறியபடி காரை வாங்கி தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாலினி, அவர் வேலை பார்க்கும் ஷோரூமிற்கு சென்று விசாரித்த போது, அவர் வேலைக்கு சரியாக வராததும், அவரிடம் எதற்காக பணத்தை கொடுத்தீர்கள் என்றும் அங்கிருந்தவர்கள் கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாலினி, இதுகுறித்து நேற்று கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குருபிரசாத் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பேரூராட்சி துணை தலைவியிடம் கார் வாங்கி தருவதாக ₹12 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : president ,Krishnagiri ,Mathayan ,Ambedkar ,Kaveripatnam, Krishnagiri district ,Malini ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்