தர்மபுரி, மே 3: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 மாதத்திற்கு பிறகு நேற்று மாலை இடியுடன் கூடிய சாரல் மழை அரைமணி நேரம் பெய்தது. பாப்பாரப்பட்டியில் மழையின் போது சூறைக்காற்று வீசியதில் வீடு, கடைகளின் மேற்கூரைகள் பறந்து சேதமடைந்தது. தர்மபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் நேற்று கொளுத்தியது. வெப்பக் காற்றினால் 108.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. வெப்ப அலை காரணமாக நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென பயங்கர இடியுடன் கூடிய சாரல் மழை பெய்தது. தர்மபுரி, அரூர், காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், நடுப்பட்டி, தாசம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்ளில் இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. நகரில் 6.30 மணிக்கு தொடங்கிய மழை முதல் 7 மணி வரை நீடித்தது. கடந்த 7 மாதத்திற்கு பிறகு தர்மபுரியில் சாரல் மழை பெய்துள்ளது.
அதேபோல், பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியில் நேற்று மாலை 7 மணி முதல் பயங்கர சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இந்த காற்றுக்கு சந்தை கடைகள் மற்றும் கடை வீதிகளில் உள்ள கடைகளின் கூரை தகடுகள் காற்றில் பறந்தன. சாலையில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள், வெயிலுக்கு மறைவாக கட்டிய தடுப்புகள் அனைத்தும் காற்றில் பறந்தது. தொடர்ந்து இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது.
The post 7 மாதத்திற்கு பிறகு தர்மபுரியில் இடியுடன் கூடிய சாரல் மழை appeared first on Dinakaran.