×

அரபு நாடுகளில் மீண்டும் கனமழை சென்னையில் விமான சேவை தாமதம்: பயணிகள் அவதி

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளான துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மாதம் வரலாறு காணாத பலத்த மழை பெய்து, சுமார் ஒரு வாரம் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத் போன்ற நாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களும், சென்னையில் இருந்து அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக இயங்குவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

துபாயிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு சென்னை வரவேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 4.30 மணி நேரம் தாமதமாக பகல் 12.40 மணிக்கு சென்னை வந்தது. அபுதாபியில் இருந்து நேற்று காலை 8.40 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நான்கு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக பகல் ஒரு மணிக்கு வந்தது. அபுதாபியில் இருந்து எத்தியார்ட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மற்றும் குவைத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் போன்ற விமானங்களும் நீண்ட நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன.

இந்த விமானங்கள் மீண்டும் துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத் போன்ற இடங்களுக்கு பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. விமானங்கள் தாமதம் குறித்து பயணிகளுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யப்படாததால், எப்போது சென்னைக்கு வரும், எப்போது புறப்பட்டு செல்லும் என்று தெரியாமல் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். இதனால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் அந்தந்த விமான நிறுவன கவுண்டர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள் அரபு நாடுகளில் பலத்த மழை பெய்து மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமாவும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்லும் பயணிகள், முன்னதாகவே அந்தந்த விமான நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு விமானம் எப்போது சென்னைக்கு வரும், எப்போது புறப்படும் என்பதை அறிந்து விமான நிலையத்திற்கு வந்தால் போதும் என்று கூறினர். ஆனால் பயணிகள் தரப்பில், விமான நிறுவனங்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால், போனை எடுப்பது கிடையாது. எடுத்தாலும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விடுகின்றனர். இணையதளத்தில் முறையான பதிவுகள் எதுவும் இல்லை. இதனால்தான் விமான நிலையத்திற்கு வந்து அவதிப்படுகிறோம் என்றனர்.

The post அரபு நாடுகளில் மீண்டும் கனமழை சென்னையில் விமான சேவை தாமதம்: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai ,United Arab Emirates ,Dubai ,Abu Dhabi ,Arab ,
× RELATED இன்ஸ்டாவில் “டைவர்ஸ்” அறிவித்த...