கின்ஷாசா: காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது. காங்கோ நாட்டில் கடந்த ஜனவரி முதல் புதிய வகை குரங்கு அம்மை வேகமாக பரவி வருகின்றது. இதுவரை சுமார் 4500 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 300 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களை காட்டிலும் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேகமாக பரவி வரும் இந்த அம்மை நோய் காரணமாக சமீபத்தில் காங்கோவில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு காங்கோவில் உள்ள மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான கால கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இந்த அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில், குரங்கு அம்மையில் உள்ள சமீபத்திய மரபணு மாற்றங்கள் மனிதர்களுக்கு தொடர்ந்து பரவுவதன் விளைவாக ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அம்மையை பரப்புவதாக கருதப்படும் விலங்குகளுடன் அதிகம் தொடர்பு இல்லாத நகரத்தில் இந்த நோய் வேகமாக பரவி வருகின்றது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு அம்மையால் ஏற்படும் புண்கள் லேசானவை மற்றும் பிறப்புறுக்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயை கண்டறிவது கடினமாகி உள்ளது.
காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் நோய்க்கான மரபியல் பற்றிய ஆய்வுக்கு தலைமை தாங்கும் ஆராய்ச்சியாளர் பிளாசைட் எம்பாலா கிஞ்சிபெனி கூறுகையில், ‘‘குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தாங்களாகவே முன்வந்து தெரிவிக்காவிட்டால் நோய் பரவுவது யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இது ஆபத்தானது”என்றார்.
The post காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை: சுகாதார அவசர நிலை பிரகடனம் appeared first on Dinakaran.