மும்பை: விஷ ஊசி செலுத்தி போலீஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொள்ளை மற்றும் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தானேவை சேர்ந்தவர் விஷால் பவார்(30). போலீஸ் கான்ஸ்டபிளான இவர் ஏப்ரல் 28ம் தேதி இரவு 9.30 மணிக்கு புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்தார். சாதாரண உடையில் இருந்த விஷால் ரயில் பெட்டியின் கதவோரம் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
சயான் மற்றும் மாட்டுங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்துக்கு அருகே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் விஷாலின் கையில் இருந்த செல்போனை அபகரிக்க முயற்சித்தார். அப்போது செல்போன் கீழே விழவே அந்த நபர் செல்போனை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். ரயிலில் இருந்து குதித்த விஷால் அந்த நபரை துரத்திக் கொண்டு ஓடினார். சிறிது தூரம் சென்றதும் ஒரு போதை கும்பல் விஷாலை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்க தொடங்கியது.
பின்னர் அவரது முதுகில் விஷ ஊசியையும், வாயில் சிவப்பு நிறத்தில் ஒரு திரவத்தையும் ஊற்றி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதில் மயங்கி கீழே விழுந்த விஷால் அடுத்த நாள் காலை தான் கண் விழித்தார். தட்டுத் தடுமாறி வீட்டுக்கு வந்த விஷால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை தானேவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷால் கடந்த புதன் கிழமை உயிரிழந்தார். இதையடுத்து கோப்ரி போலீசில் விஷாலின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். அந்த வழக்கு தாதர் ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து போதை கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
The post ரயிலில் பறித்த செல்போனை மீட்க முயன்ற போது விஷஊசி செலுத்தி போலீஸ்காரர் கொலை: மகாராஷ்டிராவில் கொடூரம் appeared first on Dinakaran.