×
Saravana Stores

வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி மோட்டர் டேங்க் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு


வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி டேங்க், பயன்பாட்டிற்கு வருவது எப்போது என பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த, பேரூராட்சியில் குடியிருப்பு பகுதிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. வாலாஜாபாத் பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கும் பாலாற்று படுகையில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீரை ஏற்றி, நாள்தோறும் சுழற்சி முறையில் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கோடைகாலத்தில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், அதனை சரிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சிக்கு உட்பட்ட சிவன்படை வீதி, கரிகார தெரு, என்என் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 15வது மானிய நிதி குழு திட்டத்தின் கீழ், 3 இடங்களில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மினி மோட்டார் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினி மோட்டார் டேங்க் அமைக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும், இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சியில் நாள்தோறும் பாலாற்று குடிநீர் சுழற்சி முறையில் வழங்கி வருகின்றனர். இந்த குடிநீர் கரிகார தெரு, என்என் சாலை, சிவன்படை வீதி ஆகிய தெருக்களில் குடிநீர் விநியோகம் கோடைகாலத்தில் சீராக வருவதில்லை.

இதனால், இப்பகுதி பொதுமக்கள் கோடைகாலத்திற்கு முன்பு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மினி மோட்டார் டேங்க் அமைத்துதர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இக்ககோரிக்கையின்படி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் மினி மோட்டார் டேங்க் அமைக்கப்பட்டது. இருப்பினும், இதுநாள் வரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. மேலும், கோடை காலம் துவங்கியுள்ளநிலையில் நாள்தோறும் குடிநீருக்காக அருகாமையில் உள்ள தெருக்களுக்கு குடங்களுடன் அலைய வேண்டியநிலை ஏற்பட்டுள்ளன. இதுபோன்றநிலையில் மக்களின் வரிப்பணத்தில் அமைத்துள்ள மினி மோட்டார் டேங்கை, கோடை காலத்திற்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி மோட்டர் டேங்க் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Walajahabad ,Walajahabad Municipality ,Walajabad Municipality ,
× RELATED தேவரியம்பாக்கத்தில் மகளிர் சுய வேலை வாய்ப்பு பயிற்சி முகாம்