பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு தடுப்பணையில் தடைமீறி குளிக்க சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வறட்சி காரணமாக தண்ணீர் வரத்து இல்லாததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஆற்றின் தடுப்பணை இறங்கி குளித்தனர். தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால் அசம்பாவித சம்பவத்தை தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தடுப்பணை செல்லும் வழியில் பொதுப்பணித்துறை சார்பில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. மேலும், தடையை மீறி குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மே தின விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் தடுப்பணையில் குளிக்க வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடையை மீறி குளிக்க சென்றால், வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் ஆழியார் தடுப்பணையில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
The post ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய சுற்றுலா பயணிகள்: போலீசார் எச்சரித்து அனுப்பினர் appeared first on Dinakaran.