சென்னை: சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. 18வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் தான் நீலகிரி மற்றும் ஈரோட்டில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்களால் சில நிமிடங்களில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் கூறியதாவது; ஏப்.19-ல் நடந்த மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் லயோலா, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.