டெல்லி: மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரிய மனுவில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர்களின் குரல் என்ற அமைப்பு சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மக்களவை தேர்தலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, நடிகர்கள் அமீர்கான், ரன்பீர் கபூர் ஆகியோர்களின் டீப் ஃபேக் வீடியோக்களை கொண்டு தவறான தகவல்களை பரப்புகின்றனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜேம்ஸ் மேத்தா ஆஜராகி, அச்சு காட்சி ஊடகங்களை தேர்தல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை போல சமூக வலைத்தள பதிவுகளுக்கும் இருக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு டெல்லி உயர்நீதிமன்றம், இந்த யோசனை பொருத்தமற்றது என்றும் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் ஏற்பாடு சரியாகவே உள்ளது என்று கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஸ்பேக் வீடியோக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. டீப் ஃபேக் வீடியோக்களை யார் வேண்டுமானும் உருவாக்க முடியும் என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை நம்புகிறோம். தற்போதைய நிலையில், தலையிடுவது பொருத்தமாக இருக்காது. இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்திடமே விட்டுவிடுகிறோம். தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்து மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
The post மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.