வாஷிங்டன்: அமெரிக்க பல்கலை கழகங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் மாகாண காவல்துறையினர் களம் இறக்கப்பட்டுள்ளனர். கச்சாமீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பல்வேறு மாகாணங்களில் பல்கலை கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2 வாரங்களாக போராட்டம் நடத்திவந்த கொலம்பியா பலகலை கழக மாணவர்களை காவல்துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர் இதற்கு மாணவர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நியூயார்க்கின் போர்த்தம் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த மாணவ, மாணவியரை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர். நியூயார்க், கலிபோர்னியா, டெக்சாஸ் பல்கலை கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து அணைத்து அமெரிக்க மாகாணங்களிலும் போராட்டத்தை தீவிரபடுத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் நலனுக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் அமெரிக்க மாணவர்களுக்கு பாலஸ்தீன இளைஞர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். காசாவில் டயர், அல்வலா நகரத்தில் ஒன்று திரண்ட பாலஸ்தீன இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நன்றி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமெரிக்க மாணவர்களுக்கு நன்றி தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதனிடையே பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலை கழக மாணவர்கள் பல்கலை கழக வளாகத்திலேயே கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பிரிட்டனில் உள்ள பிற பல்கலைகழகங்களுக்கு போராட்டத்தை விரிவுபடுத்த மாணவர் அமைப்புகள் திட்டமிட்டுள்ளனர்.
The post அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி appeared first on Dinakaran.