பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் வெளியானவுடன் ஜெர்மனி தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி எம்பியாக இருப்பவர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். இந்த முறையும் அதே தொகுதியில் பாஜ கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடந்த 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனிடையே பாலியல் தொல்லை கொடுத்தாக பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை ரேவண்ணா மீது அவரது வீட்டில் வேலை செய்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் பிரஜ்வல் மீதான பாலியல் புகார் தொடர்பாக பென்டிரைவ் ஒன்று சிக்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளது. அதில், கடந்த 2019 முதல் 2022 வரை பல பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான 3,000 க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதன் எதிரொலியாக பிரஜ்வலை கைது செய்ய கர்நாடக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை அளித்தது. மறுபக்கம் பாலியல் புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை மஜத் கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணாவும் 24 மணி நேரத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எஸ்ஐடி நோட்டீஸ் அனுப்பியது.இதுதொடர்பாக டிவீட் செய்துள்ள பிரஜ்வல் ரேவண்ணா, நான் பெங்களூருவில் இல்லை. எனவே விசாரணைக்கு ஆஜராக முடியாது என்பதால், எனது வழக்கறிஞர் மூலமாக பெங்களூரு எஸ்ஐடி போலீசாரிடம் ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறேன். உண்மை விரைவில் வெல்லும் என்று பிரஜ்வல் டிவிட் செய்துள்ளார்.
இந்த நிலையில், பிரஜ்வலின் கோரிக்கையை சிறப்பு புலனாய்வு குழு நிராகரித்துள்ளது. அத்துடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போய்விட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதிலும் சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக இறங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக எஸ்ஐடி. தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ்-தேடும் குற்றவாளி என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் பிரஜ்வல் கைது செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!! appeared first on Dinakaran.