×

கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் சக்தி ஆனந்தன், விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு..!!

கோவை: கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் சக்தி ஆனந்தன், விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் சக்தி ஆனந்த் என்பவர் மை வி3 ஆட்ஸ் என்ற செயலியை நடத்தி வருகிறார். விளம்பரம் பார்த்தால் காசு தருகிறோம் என்ற இவர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துள்ளனர். அதேநேரம் சொன்னது போல அனைவருக்கும் இவர்கள் பணத்தையும் உரிய நேரத்தில் கொடுத்தும் வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் இவர்கள் நிறுவனத்தின் மீது புகார்கள் அளிக்கப்பட்டது. பொதுமக்களிடம் ரூ.360 முதல் 1.20 லட்சம் வரை பணம் வாங்கிவிட்டு அவர்களை ஏமாற்றுவதாகப் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி புகார் அளித்தார். அதன்படி மை வி3 ஆட்ஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக சக்தி ஆனந்தன், விஜயராகவன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அசோக் ஸ்ரீநிதிக்கு செல்போன் மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த கொலை மிரட்டலை தொடர்ந்து அசோக் ஸ்ரீநிதி கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்தியபோது அது மை வி3 நிறுவன ஊழியர் என தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக அசோக் அளித்த புகாரின் பேரில் மை வி3 நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன், விஜய ராகவன் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சக்தி ஆனந்தன் மீது 3 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக சக்தி ஆனந்தனிடம் விசாரணை மேற்கொண்டு கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் சக்தி ஆனந்தன், விஜயராகவன் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Sakthi Anandan ,Vijayaraghavan ,Coimbatore ,Shakti Anand ,Dinakaran ,
× RELATED தொழிலதிபரிடம் ரூ.9.14 கோடி மோசடி