சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் ஜூன் 2வது வாரத்தில் சட்டப்பேரவை கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார். அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் 2 நிமிடங்களில் தன்னுடைய உரையை முடித்தார். அதாவது, தமிழக உரையில் அரசியல் அமைப்புக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. தார்மீகத்துக்கு முரணான பல்வேறு கருத்துக்கள் இருப்பதால் தான் வாசிக்க மாட்டேன் என்று தெளிவுபடுத்திவிட்டு அமர்ந்தார்.
இதன் காரணமாக சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையை முழுமையாக வாசித்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் நிலவியது. அதற்கு மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்றது. தமிழக பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. அதற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 2வது வாரத்தில் சட்டப்பேரவை கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது மீண்டும் விவாதங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை என்பது நடைபெறும். எனவே தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு ஜூன் 2வது வாரம் கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும். ஜூன் 2வது வாரத்தில் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமார் 25 நாட்களுக்கு மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!! appeared first on Dinakaran.