டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர் விளக்கம் கேட்பதாக கூறி தவறான மனுவை தாக்கல் செய்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தகவல் தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து தெளிவு தேவை என கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏலத்திற்கு பதிலாக நிர்வாக ஆணை மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனு பட்டியலுக்காக வந்த போது அதை உச்சநீதிமன்ற பதிவாளர் நிராகரித்துள்ளார். 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு கோருவதாக உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். விளக்கம் கேட்பதாக கூறி ஒன்றிய அரசு தவறான மனுவை தாக்கல் செய்துள்ளதாகவும் இதனை ஆண்டுகள் கழித்து எந்த காரணமும் இன்றி இந்த மனுவை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். பதிவாளரின் உத்தரவை எதிர்த்து 15 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்து விசாரிக்க கோரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம் appeared first on Dinakaran.