தூத்துக்குடி: கோடை வெயிலை சமாளிக்க வீடுகளை குளுமையாக வைக்க உதவும் தென்னந்தட்டிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே தென்னந்தட்டிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட வியாபாரமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காலையில் சுட்டெரிக்க தொடங்கினால் மாலை வரை கொளுத்துகிறது கோடை வெப்பம். வெயிலில் இருந்து தப்பிக்க ஏ.சி. முதல் மண்பானை வரை வசதிக்கேற்ப ஏதேனும் ஒன்றை நாடுகின்றனர் மக்கள். அப்படி வீடுகளில் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள ஏழை, எளிய மக்கள் முதலில் நாடுவது தென்னந்தட்டிகளை தான்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை பகுதி முழுக்கவே தென்னந்தட்டி தயாரிப்பே பிரதான தொழிலாக உள்ளது. மற்ற நாட்களைவிட கோடை காலத்தில் தென்னந்தட்டிகளின் விற்பனை பலமடங்கு அதிகரித்தே காணப்படுவதாக கூறப்படுகிறார்கள் விவசாயிகள். காலையிலேயே வெயிலுக்கு முன்பாக தென்னை மரங்களில் இருந்து ஓலைகளை வெட்டி வாகனங்களில் கொண்டு வரும் வியாபாரிகள் அதை தொழிலாளர்களின் வீடுகளில் கொடுத்து தட்டியாக முடையப்படும்.
பெரும்பாலும் பெண்களே இந்த பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு 10 முதல் 15 தட்டிகள் செய்து கொடுப்பதன் மூலம் ரூ.300 முதல் ரூ.450 வரை வருவாய் கிடைப்பதாக கூறுகின்றனர் பெண்கள். மற்ற நாட்களில் பந்தல் போட பயன்படும் பாதி ஓலையில் தயார் செய்யப்படும் தட்டிகளே பெருமளவில் விற்பனையாகும் என்றும், ஆனால் கோடை காலத்தில் கூரை அமைக்க எளிதாக இருக்கக்கூடிய முழு ஓலையில் செய்யக்கூடிய தட்டிகளை மக்கள் விரும்பி வாங்குவதாக கூறுகின்றனர்.
The post கோடைக்காலத்தில் தென்னந்தட்டிகளுக்கு திடீர் மவுசு!.. தூத்துக்குடியில் ஓலைகளை முடைந்து நாளொன்றுக்கு ரூ.450 வரை சம்பாதிக்கும் பெண்கள்..!! appeared first on Dinakaran.