சென்னை: கோடை காலத்தையொட்டி இருசக்கர வாகனத்தை வைத்திருப்பவர்கள் அதிக நேரம் வண்டியை வெயிலில் நிறுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருசக்கர வாகனங்களும் விளங்குகின்றன. இங்கு கார் பயன்படுத்துவோரை விட அதிகப்படியாக பைக்குகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் பல குடும்பங்களில் வீட்டிற்கு குறைந்தது இரண்டு பைக்குகள் வைத்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதமாகவும், பைக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 89 சதவீதமாகவும் உள்ளன. தற்போது வெயில் காலம் என்பதால் பைக்குகளை சரியாக பராமரிக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இதுகுறித்து இருசக்கர வாகனத்தை பழுது நீக்கும் பீர் முகமது கூறியதாவது: கோடை காலத்தில் பைக்குகளில் சிறு கோளாறு ஏற்பட்டால் கூட அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, வெளிப்புற வெப்பத்தினால் மட்டுமின்றி அதிகப்படியாக வாகனங்களை ஓட்டினால் இன்ஜின் பிரச்னை ஏற்படும்.
எனவே தொலைதூர பயணத்தை தவிர்க்க வேண்டும். பைக் டயரை 3 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், காற்று அளவு குறைவாக இருந்தால் இன்ஜின் அதிக அழுத்தத்தை அடையும் என்பதால் காற்று அளவை சரிப்பார்ப்பது நல்லது. அதேபோல், பெட்ரோல் டேங்க் முழுதாக நிரப்புவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணம், ஏற்கனவே வெளியே இருக்கும் வெப்பம் அதிகம் என்பதால் முழு டேங்க் நிரப்பினால் உள்ளே காற்று இடைவெளி குறையும் என்பதால் இதை பின்பற்ற வேண்டும். பைக்கை எப்போதும் நிழலில் நிறுத்துவது நல்லது. வெயில் காலங்களில் அதிக நேரம் வெயிலில் இருப்பதால் பைக் ஓட்டுவதற்கு முன்பாகவே பைக்கின் வெப்பம் அதிகம் இருக்கக்கூடும், சில சமயங்களில் அதிகப்படியான வெயில் காரணமாக தீப்பிடிக்கும் அபாயமும் உண்டு. எனவே, இதனை தவிர்ப்பது நல்லது. இதுதவிர, பைக்கை கவர் மூலம் மூடுவது, பேட்டரில் உள்ள தண்ணீரை சரி பார்ப்பது, பைக் மூலம் தொலைதூர பயணத்தை தவிர்ப்பது போன்றவை கோடை காலத்தில் பின்பற்றினால் எந்தவித பாதிப்பும் இன்றி பயணங்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post கோடையில் அவசியமாகும் பைக் பராமரிப்பு; அதிக நேரம் பைக்கை வெயிலில் நிறுத்தினால் தீ பிடிக்க வாய்ப்பு: டேங்க் முழுமையாக நிரப்ப வேண்டாம் appeared first on Dinakaran.