சோழிங்கநல்லூர்: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றாலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகளில் எந்தவித தாமதமும் இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கிறது. இந்த பணிகளை 2028ம் ஆண்டுக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலிருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் கட்டுமான பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பீகார், சட்டீஸ்கர், மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் கட்டுமானத்திற்கு பணி அமர்த்தப்பட்டனர். வழக்கமாக சுமார் 20,000 தொழிலாளர்கள் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்வேறு இடங்களில் பிரிந்து பணியாற்றுகின்றனர். ரூ.63,246 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தில் குறிப்பாக கணிசமாக வட மாநில தொழிலாளர்கள் மூலமாக இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் 3ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவரவர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு வாக்களிக்க சென்றுள்ளனர். வாக்களிப்பு என்பது இந்தியர்களின் ஜனநாயக கடமையாகும். அதன்படி அவர்களுக்கான விடுமுறை என்பது அளித்துள்ளோம். இருப்பினும் இவர்களுடைய பணிகளுக்கு ஈடுசெய்யும் வகையில் வேலைகள் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை. மேலும் இம்மாத இறுதிக்குள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள். அவர்கள் வந்த பிறகு கூடுதலாக பணிகளை மும்முரமாக மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post வாக்களிக்க சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களால் மெட்ரோ கட்டுமான பணியில் எந்தவித தாமதமும் இல்லை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.