×
Saravana Stores

கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: 500 ஏக்கர் வனப்பகுதிகள் நாசம்


கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாகின. 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனப்பகுதிகளிலும் மற்றும் அதை ஒட்டியுள்ள வருவாய் நிலங்கள், தனியார் நிலங்களில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி வருகிறது. கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்ேபாது ெபரிய காட்டுத்தீயாக மாறி 5 நாட்களுக்கும் மேலாக இரவு, பகலாக பற்றி எரிந்து வருகிறது.

வனத்துறையினர் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. காட்டுத்தீயில் இதுவரை 500 ஏக்கருக்கு மேலாக காடுகள் எரிந்து நாசமாகி விட்டன. இதனால் இப்பகுதியில் பசுமை போர்த்தி காணப்பட்ட புல்வெளிகள் தற்போது சாம்பல் நிறைந்த காடுகளாக காட்சியளிக்கின்றன. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு துறையில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள், நகராட்சியில் இருந்து 11 தண்ணீர் வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் நகராட்சி, ஊரக உள்ளாட்சி, வனப்பணியாளர்கள், உள்ளூர்வாசிகள் என 500க்கும் மேற்பட்டோர் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,‘ காட்டுத்தீ தொடர்ந்து அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்கும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இதுவரை இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது. இதன் காரணமாக பல நூறு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானதுடன், அங்கு வசித்து வந்த வனவிலங்குகளின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை. காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்,’ என்றனர்.

கனரக வாகனங்கள் செல்ல தடை
திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி கூறுகையில்,‘ மன்னவனூர், பூம்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள், தண்ணீர் டேங்கர் வாகனங்கள் செல்கின்றன. இதனால் வகையில் பூம்பாறை ஜங்ஷன் முதல் மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இன்று இரவு வரை இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது,’என்றார்.

The post கொடைக்கானலில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: 500 ஏக்கர் வனப்பகுதிகள் நாசம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் தொடர்மழை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு