புதுடெல்லி: அமலாக்கத்துறை ஒன்றும் சட்டத்திற்கு மேலான அமைப்பு இல்லை என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமித் கத்யால் என்பவர், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி ஜாமின் நீட்டிப்பு கோரியிருந்தார். தனியார் மருத்துவர்களின் அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி அமலாக்கத்துறை தரப்பு ஜாமினுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் 50 ஆவது பிரிவின் இரண்டாவது உட்பிரிவை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி வழக்கில் தொடர்பில்லாத தனியார் மருத்துவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நீதிபதி காட்டமாக கூறினார்.
மேலும் நீதிபதி கூறுகையில்,’ அமலாக்கத்துறை ஒன்றும் சட்டத்துக்கு மேலான அமைப்பு இல்லை. அதிகாரம் படைத்த அமைப்புகள்,தலைவர்கள், தங்கள் பலத்தை சாதாரண குடிமக்கள் மீது பயன்படுத்தி வருகிறார்கள். அரசுக்கு சில கடமைகள் இருக்கும்போது குடிமக்களுக்கும் சில உரிமைகள் உள்ளன. குடிமக்களுக்கு எதிராக அரசுக்கு சில உரிமைகள் உள்ளன என்ற வாதம் சர்வாதிகாரத்தைத் தூண்டுவதற்கு அடிப்படையாக அமையும். அதிகாரத்தின் உண்மையான அளவுகோல், அதைக் கடைப்பிடிப்பதில் இருக்கிறது. எதிர்காலத்தில் இதேபோன்று நடப்பதை தடுக்க அமலாக்கத்துறைக்கு இந்த நீதிமன்றம் எச்சரிக்கிறது. எவ்வாறாயினும் அமலாக்கத்துறை தனது சொந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் இதேபோன்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒரு விஷயம் நீதிமன்றத்தின் நேரடி பரிசீலனையில் இருக்கும்போது, நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்ட விதிமுறைகளை அமலாக்கத்துறை கடைபிடிக்க வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதி,அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் இயக்குநருக்கும், விதிகளை மீறி உடல்நலம் குறித்து சான்றளித்த மருத்துவர்கள் குறித்து துறை சார்ந்த அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் உடல்நலம் தேறிவருவதால் அமித்கத்யாலுக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அவரை சரண் அடைய உத்தரவிட்டார்.
The post அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான அமைப்பு இல்லை: டெல்லி நீதிமன்றம் கண்டிப்பு appeared first on Dinakaran.