புதுடெல்லி: தேர்தலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ள வேட்பாளர்களின் வேண்டுகோளின் பேரில், சின்னம் ஏற்றும் யூனிட்களுக்கு சீல் வைக்கவும், சேமிக்கவும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிக்கப்பட்ட மைக்ரோ கன்ட்ரோலர்களை சரிபார்க்கவும் உச்ச நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களுடன் சின்னம் ஏற்றும் இயந்திரங்களை கன்டெய்னரில் சீல் வைத்து பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னம் ஏற்றும் யூனிட்டுகளைக் கையாள்வதற்கும் சேமிப்பதற்கும் புதிய நெறிமுறைகளை செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை உருவாக்க அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி, மே 1, 2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் வாக்குபதிவு ஒப்புகை சீட்டு கருவிகளில் சின்னம் ஏற்றும் செயல்முறைக்கு இந்த நெறிமுறைகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
நிகோபார் பழங்குடியினர் முதல்முறையாக வாக்களிப்பு
தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதி பழங்குடியினர் அதிகளவில் தேர்தலில் பங்கெடுப்பது தொடர்பாக தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக எடுத்து வந்து முயற்சியின் பலனாய் கிரேட் நிகோபார் தீவுகளில் வாழும் சோம்பன் பழங்குடியினர் முதல் முறையாக மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர். இந்தியாவில் 8.6 சதவீத பழங்குடியினர் உள்ளனர். அவர்களில் 75 பிரிவினர் ஆதி பழங்குடியினர் வகையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post வாக்குப்பதிவு இயந்திரங்கள்,வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் சின்னங்களை சேமிப்பது குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: தேர்தல் ஆணையம் வெளியீடு appeared first on Dinakaran.