×

கேப்டன் ருதுராஜ் அரை சதம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்


சென்னை: சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரகானே, கேப்டன் ருதுராஜ் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 64 ரன் சேர்த்தது. ரகானே 29 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ஷிவம் துபே சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். ஜடேஜா 2 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, சென்னை அணி 9.5 ஓவரில் 70 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், ருதுராஜ் சமீர் ரிஸ்வி ஜோடி பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் 4வது விக்கெட்டுக்கு 37 ரன் சேர்த்தனர். ரிஸ்வி 21 ரன் எடுத்து ரபாடா வேகத்தில் ஹர்ஷல் வசம் பிடிபட்டார். அடுத்து ருதுராஜ் – மொயீன் அலி இணைந்து 38 ரன் சேர்த்தனர். ருதுராஜ் 44 பந்தில் அரை சதம் அடித்தார். ருதுராஜ் 62 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். எம்.எஸ்.தோனி 14 ரன் விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டாக, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. மிட்செல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் பந்துவீச்சில் ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் தலா 2, ரபாடா, அர்ஷ்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது.

அந்த அணி 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பேர்ஸ்டோ அதிகபட்சமாக 46 ரன் (30 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ரோஸ்சவ் 43 ரன் எடுத்தார். சென்னை பந்துவீச்சில் தாக்கூர், க்ளீசன், ஷிவம் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டியில் 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. சென்னை அணி 10 போட்டியில் 5வது தோல்வியை சந்தித்தது.

The post கேப்டன் ருதுராஜ் அரை சதம் வீண்: சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் appeared first on Dinakaran.

Tags : Captain Rudhuraj ,Punjab Kings ,CSK ,Chennai ,IPL league ,Super Kings ,MA Chidambaram Stadium ,Chepakkam, ,Sam Karan ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு