×

பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி

மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் தோல்வியைத் தழுவிய உள்ளூர் நட்சத்திரம் ரபேல் நடால், தனது டென்னிஸ் பயணம் இன்னும் முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். முன்னாள் நம்பர் 1 வீரரும், 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான நடால் (37 வயது, 512வது ரேங்க்), காயம் மற்றும் அறுவைசிகிச்சை காரணமாக நீண்ட ஓய்வில் இருந்தார். இந்நிலையில் சொந்த மண்ணில் நடக்கும் மாட்ரிட் ஓபனில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது. கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டு இத்தொடரில் களமிறங்கிய நடால், முதல் 3 சுற்றுகளில் நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

4வது சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி லெஹச்கா (22வயது, 31வது ரேங்க்) உடன் முதல் முறையாக மோதிய நடால் 5-7, 4-6 என நேர் செட்களில் போராடி தோற்றார். இப்போட்டி 2 மணி ஒரு நிமிடத்துக்கு நீண்டது.  பின்னர் பேசிய நடால், ‘மாட்ரிட் ஓபனில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இந்த வாரம் எனக்கு மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. எனக்கும் டென்னிசுக்கும் நேர்மறையான உத்வேகத்தை கொடுத்தது. சில வாரங்களுக்கு முன்பாக, மீண்டும் களமிறங்கி விளையாடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், இப்போது அது சாத்தியமாகி இருக்கிறது. இதை மறக்கவே முடியாது. நான் சொல்ல வேண்டியது ஒன்று மட்டுமே… நன்றி. 2003ல் ஒரு சிறுவனாக இங்கு வந்தேன். அப்போது உள்ளரங்கில் தான் போட்டிகள் நடந்தன. அதன் பிறகு இதே களத்தில் நான் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றது கனவு போல உள்ளது.

மாட்ரிடில் நான் விளையாடியது இதுவே கடைசி முறை என்றாலும்… இந்த பயணம் இன்னும் முடியவில்லை’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி தங்களின் அபிமான வீரருக்கு பிரியாவிடை கொடுத்தனர். மாட்ரிட் ஓபனில் அதிக முறை பட்டம் வென்றவர் (5), அதிக வெற்றிகளைக் குவித்த வீரர் (59) என்ற சாதனைகளை நடால் படைத்துள்ளார். இம்மாதம் 28ம் தேதி தொடங்க உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் நடால் பங்கேற்பது உறுதியாகி உள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அவர் வென்ற 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில், 14 பிரெஞ்ச் ஓபனில் வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Natal ,Madrid ,Madrid Open ,Spain ,Rafael Nadal ,Nadal ,Dinakaran ,
× RELATED மரக்கன்றுகள் நடல்