பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் குறித்த முதன் முதலில் வெளியிட்ட சீன விஞ்ஞானிக்கு மீண்டும் ஆய்வகத்தில் பணிபுரிய அந்த நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகரான வூகானில் கொரோனா வைரஸ் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. கொரோனா வைரஸ் மெல்ல,மெல்ல பரவியபோது, அது பற்றி அரசை எச்சரிக்கும் விதமாக ஜாங் யோங்ஸென் என்ற விஞ்ஞானி 2020 ஜனவரி 5ல் அரசுக்கு கடிதம் எழுதினார். இதனால் அவருடைய மருத்துவ ஆய்வகத்தை சீன அரசு மூட உத்தரவிட்டது.
இந்த விஷயத்தை அறிந்த வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஜாங் யோங்ஸென்னின் அறிக்கையை வெளியிடுமாறு சீன அரசை வலியுறுத்தினர். பின்னர் ஜனவரி 11ம் தேதி ஜாங் யோங்ஸென் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அறிக்கையை அரசின் அனுமதியின்றி வெளியிட்டார். இதன் மூலம் தான் கொரோனா வைரஸ் சோதனைக்கான கருவி, கட்டுப்பாடு விதிமுறைகள் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கு அடித்தளமாக இருந்தது. வைரஸ் பரவலை வெளி உலகுக்கு தெரியாமல் வைத்திருக்க விரும்பிய சீனாவுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்த யோங்ஸென் நீக்கப்பட்டார். அதன் பிறகு சாங்காயில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி கூடத்தில் அவர் பணிபுரிந்து வந்தார்.
கடந்த வாரம் அவர் பணிபுரிந்து வந்த ஆய்வு கூடத்தை அதிகாரிகள் திடீரென பூட்டினர். மறு சீரமைப்பு பணிகளுக்காக ஆய்வு கூடம் பூட்டப்பட்டுள்ளதாக சீன அரசு விளக்கம் அளித்திருந்தது. இதை கண்டித்து யோங்ஸென்னின் தலைமையில் விஞ்ஞானிகள் ஆய்வகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆராய்ச்சியை தற்காலிகமாக தொடர்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று விஞ்ஞானி யோங்ஸென் வெய்போ சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
The post கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல் வெளியிட்ட சீன விஞ்ஞானிக்கு மீண்டும் ஆய்வகத்தில் பணிபுரிய அனுமதி appeared first on Dinakaran.