×
Saravana Stores

கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ2.1 லட்சம் கோடி


புதுடெல்லி: கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரூ2.1 லட்சம் கோடி வசூல் ஆனதாக, நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு வரி வசூலை அதிகரிப்பதில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஜிஎஸ்டி அமலானதால் மாநிலங்களுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பீடு ஏற்பட்டது. இதனை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்கியது. அதுவும் போதுமான இழப்பீடு வரவில்லை ; இழப்பீடு பெற தாமதம் ஆகிறது என பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கின. தற்போது இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி இதுவரை இல்லாத அளவாக ரூ2.1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.4 சதவீத உயர்வாகும். இந்த வசூல் உள்நாட்டு பரிவர்த்தனை 13.4 சதவீதம் மற்றும் இறக்குமதி 8.3 சதவீதம் அதிகரித்ததால் சாத்தியம் ஆகியுள்ளது. கடந்த மாத வசூலானது முந்தைய மாதத்தை விட ரூ1.78 லட்சம் கோடியும், கடந்த ஆண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 1.87 லட்சம் கோடியும் அதிகமாகும். கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ 43,846 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ 53,538 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 99,623 கோடி, இறக்குமதி மூலம் ரூ 37,826 கோடி அடங்கும். செஸ் வரி மூலம் ரூ13,260 கோடியும், இதில் இறக்குமதி மூலம் ரூ1,008 கோடியும் வசூலானது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ‘‘ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவை எதுவும் இல்லை. ரீபண்ட் போக கணக்கிட்டால் கடந்த மாத ஜிஎஸ்டி வசூல் ரூ1.92 லட்சம் கோடியாகும். இது முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 15.5 சதவீத வளர்ச்சியாகும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில் தமிழ்நாடு மூலம் கிடைத்தது ரூ12,210 கோடி. இது முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகம். மகாராஷ்டிரா மூலம் ஜிஎஸ்டி வசூல் 13 சதவீதம் உயர்ந்து ரூ37,671 கோடியாக உள்ளது.

The post கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ2.1 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,finance ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால்...