×
Saravana Stores

போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி மடிந்த தமிழர்களும் வணங்கத்தக்க வீரர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்


சென்னை: போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி மடிந்த தமிழர்களும் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு. இரண்டாம் உலகப்போரின்போது சயாம் – பர்மா ரயில்பாதை கட்டுமான பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ் சொந்தங்களின் நினைவை போற்றும் ‘நடுகல் விழா’ தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசிய தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்த தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான். அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் இந்த நடுகல் முயற்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி மடிந்த தமிழர்களும் வணங்கத்தக்க வீரர்கள்தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin Dewitt ,Chennai ,M.K.Stalin ,Naval Marines ,
× RELATED மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை