×
Saravana Stores

மின்னகம் சேவை மைய தரவுகள் மூலம் மின் விநியோக கட்டமைப்புகள் சீரமைப்பு: அதிகாரிகள் தகவல்


சென்னை:மின்னகம் சேவை மையத்தின் தரவுகள் மூலம் மின் விநியோக கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு, மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட மின்னகம் என்ற புதிய மின்நுகர்வோர் சேவை மையம் கடந்த 2021 முதல் செயல்பட்டு வருகிறது. மின்னகம் சேவை மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. பொதுமக்கள் எளிதாக 94987 94987 என்ற எண்ணில் அழைத்து தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இந்த சேவை மையம் 3 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு புகாருக்கும் தனித்தனியாக தீர்வு அளித்தாலும், புகார்களின் தரவுகளை வைத்து ஒவ்வொரு பகுதியிலும் எந்தவிதமான சீரமைப்புகளை மேற்கொள்வது என்பதை கண்டறிந்து மின் வாரிய பணியாளர்கள் நிரந்தர தீர்வு அளிக்கின்றனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்னகத்திற்கு ஆவடி, தாம்பரம், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, கே.கே.நகர், புழல், அம்பத்தூர், ஓஎம்ஆர், திருமழிசை, மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகப்படியான அழைப்புகள் வருகின்றன. மின்னகம் சேவை மையத்திற்கு வரும் புகார்களுக்கு மின் வாரியம் தீர்வு அளிக்கிறது. ஆனால் ஒரு மாதத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து தொடர்ந்து புகார்கள் வரும் பட்சத்தில் பிரச்னையை கண்டறிய கள அலுவலர்களிடம் கருத்து கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆவடி, எழும்பூர் பகுதிகளில் மின்மாற்றிகள் அடிக்கடி பழுதடைவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூடுதல் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மடிப்பாக்கம் மற்றும் மூவரசன்பேட்டை பகுதிகளில் 30 புதிய மின்மாற்றிகளை அமைக்கும் பணி முடித்துள்ளது.

மேலும் அப்பகுதியின் கூடுதல் மின் தேவைக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதலாக 10 மின்மாற்றிகள் நிறுவப்படவுள்ளன, இதனால் அடிக்கடி ஏற்படும் மின் தடையை குறைக்கும். கோடைகாலம் என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் மின்சார நுகர்வு உச்சத்தில் இருக்கும். இருப்பினும் ஒரு பகுதியின் மின் சுமை என்ன என்பது நமக்குத் தெரியும். வீட்டிற்கு புதிய உபகரணங்களைச் வாங்கும்போது நுகர்வோர் மின்வாரியத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதால், புதிய உபகரணங்களால் ஒரு பகுதியில் ஏற்படும் கூடுதல் மின் சுமையைப் பற்றி பிரிவில் உள்ள பணியாளர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மின்மாற்றியிலும் தினசரி மின் சுமையை நேரடியாக சரிபார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை, இதனால் மின்மாற்றிகளில் ஏற்படும் பிரச்னைகளை கண்டறிவது கடினமாக உள்ளது.

மின்னகத்திற்கான அழைப்புகள் இப்போது குறைகளின் தன்மையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அவற்றை கண்காணிக்க கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் தங்களுடைய வீட்டின் மின் சுமை மூன்று கட்டங்களிலும் சமமாக விநியோகிக்கப்படுவதை நுகர்வோர் உறுதி செய்ய வேண்டும். மூன்று கட்ட இணைப்புகளைக் கொண்டவர்கள், ஒன்றில் மின்சாரம் இல்லை என்றால் மற்ற இரண்டு கட்டங்களுக்கு மாறுவார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் விநியோகம் சீரான பின்பும் மூன்றாம் கட்டத்திற்கு மீண்டும் மாற்றுவதில்லை. இது மின்மாற்றியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. டிரிப்பிங் பெரும்பாலும் கோடையில் இரவு நேரங்களில் நிகழ்கிறது, ஏனெனில் ஏசி பயன்பாடு காரணமாக சுமை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post மின்னகம் சேவை மைய தரவுகள் மூலம் மின் விநியோக கட்டமைப்புகள் சீரமைப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : ELECTROMAGNETIC SERVICE CENTER ,Chennai ,Electricity Service Centre ,Electronam ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது