×
Saravana Stores

திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு

அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று இரவு வழக்கம்போல் ஆவடிக்கு புறப்பட்டது. திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது பேருந்தின் முன்பக்க தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது.

அப்போது பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது விழுந்ததில் வலிதாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு சக பயணிகள் ஓடிவந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில், பெண்ணின் தலை, கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்பதால் அவசர அவசரமாக பேருந்தின் டிரைவர் மற்றும் நடத்துனர் தடம் எண் போர்டை கழட்டி வைத்துவிட்டு விழுந்து போன கதவை மறைத்து வைத்தனர்.

பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் டிரைவர் யாருக்கும் தெரியாமல் அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இதுதொடர்பாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், பேருந்தின் டிரைவரிடம் விசாரணை செய்தபோது காயமடைந்த பெண் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறினார். காயமடைந்த பெண்ணின் பெயர், முகவரி கேட்டபோது டிரைவர், எங்களுக்கு ஒன்றும் தெரியாது என கூறிவிட்டு சென்றுள்ளார்.

பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பேருந்தின் கதவு திடீரென கழன்று விழுந்து பெண் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில்,’திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு மாநகர பேருந்தின் தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்ததில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணின் தலை, கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் அரும்பாக்கத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் தவறி விழுந்ததில் பெண் ஒருவர் உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் மாநகர பேருந்துகள் சரியாக உள்ளதா? எனவும் பேருந்தில் சிறுசிறு பிரச்னை இருந்தாலும் அவற்றை சரி செய்து இயக்க வேண்டும் எனவும், பயணிகளை பத்திரமாக அழைத்து செல்லவேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை டிரைவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். இதனால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. இனிமேலாவது பேருந்துகளை இயக்கும் முன்பு சரி பார்த்து இயக்கவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Annanagar ,Chennai Koyambedu ,Avadi ,Thirumangalam ,Dinakaran ,
× RELATED 135 அடி உயரமுள்ள அண்ணாநகர் டவரில் ஏறி...