மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை செய்துகொண்டார். மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த கைதி அனுஜ் தாபன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் பந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்.14ம் தேதி சல்மான் கான் வீட்டருகே அதிகாலை 4:51 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இரு நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நிகழ்த்தி விட்டு தப்பிச் சென்றனர். அதிகாலை 4:51 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கி சத்தம் கேட்டு சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்ததையடுத்து குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய நபர்களை மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த இருவருக்கும் துப்பாக்கிகள் சப்ளை செய்ததாக அனுஜ் தாபன், சோனு சந்தர் எனும் இருவரும் கைது செய்யப்பட்டு 4 பேரிடமும் விசாரணை நடைபெற்றது. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ள நிலையில் இன்று அவர்களில் அனுஜ் தாபன் என்ற நபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலில் இருந்த அனுஜ் தாபன் தற்கொலை முயற்சி மேற்கொண்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.பஞ்சாப்பைச் சேர்ந்த தாதாவும், சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் பிரபல ரவுடியுமான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரன் அன்மோல் பிஷ்னோய் முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
The post நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிசூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை! appeared first on Dinakaran.