ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கி வரும் நிலையில், தாவரவியல் பூங்காவில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.
இம்முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி மற்றும் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வழங்கம் போல், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. கோடை விழா மற்றும் மற்ற கண்காட்சிகள் எதுவும் நடத்தப்படாத நிலையில் முன்னதாகவே மலர் கண்காட்சி துவக்கப்படுகிறது. இம்மாதம் 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்கி 10 நாட்கள் தாவரவியல் பூங்காவில் நடத்தப்படுகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூங்கா பொலிவுப்படுத்தப்படும். அதேபோல், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களை மகிழ்விக்கும் பொருட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டுவு பிரமாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மலர் கண்காட்சி மே மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும் நிலையில், மே மாதம் 10ம் தேதிக்கு மேல் அரங்குகள் அமைக்கப்படும். அதுவரை புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இம்முறை வரும் 10ம் தேதி மலர் கண்காட்சி துவங்கும் நிலையில், நேற்று பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதனால், பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது.
The post மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி appeared first on Dinakaran.