வேலூர் : கடந்த 2023-24ம் நிதி ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் 15.071 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு ரூ.857.04 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவிலும் இந்திய ரயில்வே தனது கடந்த நிதி ஆண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டு வருகிறது. அதேபோல் தெற்கு ரயில்வே தனது சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான வருவாய் விவரங்களை முழுமையாக வெளியிட்டு வருகிறது. அதோடு ஒவ்வொரு ரயில்வே கோட்டமும் தங்கள் நிதி ஆண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், கடந்த 1956ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், வேலூர் கன்டோன்மென்ட், திருவண்ணாமலை, போளூர், ஆரணி என 161 சிறிய, பெரிய ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் பயணிகள் மூலம் கிடைக்கும் டிக்கட் வருவாய் மட்டுமின்றி, சரக்குகள் கையாள்வதிலும் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது.
அதன்படி, திருச்சி கோட்டத்தில் கடந்த 2023-24ம் நிதி ஆண்டில் 15.071 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டதன் மூலம் ரூ.857.04 கோடி வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 13.521 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு ரூ.816.65 கோடி வருவாய் ஈட்டியது.
இதில் அதிகபட்சமாக நிதி ஆண்டின் கடைசி மாதமான மார்ச் மாதத்தில் 1.721 மில்லியன் சரக்குகளை கையாணடு ₹94.85 கோடி வருவாய் ஈட்டியது. அதற்கு முந்தைய மாத சாதனையான 1.656 மில்லியன் டன் சரக்குகளை விட இது அதிகமாகும். இவற்றில் நிலக்கரி போக்குவரத்தில் மட்டும் 11.202 மில்லியன் டன்களுடன் ₹629.86 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அதேபோல் கடந்த நிதி ஆண்டில் 161 ரயில் நிலையங்கள் வழியாக 36.48 மில்லியன் மக்கள் பயணம் செய்ததன் மூலம் ரூ.501.74 கோடி வருவாயை திருச்சி கோட்டம் ஈட்டியுள்ளது. இதுதவிர பார்சல் சேவை, பயணிகள் லக்கேஜ், சிறப்பு ரயில்கள், பிளாட்பார டிக்கட்டுகள் விற்பனை என கடந்த நிதி ஆண்டில்
ரூ .39.20 கோடி கிடைத்துள்ளது.
அத்துடன் வணிக விளம்பரங்கள், டிக்கட் அல்லா நடவடிக்கைகள், ரயில்வே இடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு விடுதல், ரயில்வேயில் உபயோகமற்ற தளவாடங்கள் விற்பனை போன்ற வழிகளில் ரூ.79.35 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வேலூர், விழுப்புரம் என 161 ரயில் நிலையங்களில் 15.071 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு ₹857 கோடி வருவாய் ஈட்டி சாதனை appeared first on Dinakaran.