சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான பணியை தமிழக அரசு எடுத்து உள்ளது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 கார்டுகள் உள்ளன. இதற்கிடையில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வேளையில் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களை பிரித்து கொண்டு புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அதனால் புதிய கார்டுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அதன்பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி நடந்தது. தற்போது சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்து உளளன. இவர்களுக்கு பல மாதங்களாக கார்டுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சிலருக்கு உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஒப்புதல் ஆகிவிட்டது என்ற குறுஞ்செய்தி வந்தது. அவர்களுக்கு கார்டுகள் வழங்கும் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி விட்டது. எனவே அவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே தேர்தல் நடைமுறைகள் வருகிற ஜூன் மாதம் 5-ந் தேதி விலக்கி கொள்ளப்பட்ட பின்பு அனைத்து மாவட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் பணிகள் நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கும் பலன் கிடைக்கும்.அதற்கிடையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஜூன் மாதம் நடப்பதாக இருந்தால் அந்த மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். அதேபோல் ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய ஸ்மார்ட் கார்டு தடையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
The post நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடக்கம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.