சிவகங்கை, மே 1: சிவகங்கை மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்களில் மீண்டும் கருவேல மரம் அகற்றம் குறித்த தீர்மானம் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும் ஒன்று முதல் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இவை தவிர ஊராட்சிகளில் தேவை ஏற்படின் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு வரை சீமைக்கருவேல மரம் அகற்றம் குறித்த தீர்மானம் இடம் பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் சீமைக்கருவேல மரம் அகற்றம் குறித்த தீர்மானம் இடம் பெறுவதில்லை. மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இதில் ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள், கண்மாய்கள், தரிசு நிலங்கள் என கிராமப்புறங்களை சுற்றியுள்ள இடங்களிலேயே இம்மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆறுகள், கால்வாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் நீர்வரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஆகையால் இது தொடர்பாக கிராம சபை கூட்டங்களில் மீண்டும் கருவேல மரம் அகற்றம் குறித்த தீர்மானம் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கிராம சபை கூட்டங்களில் மீண்டும் கருவேல மரம் ஒழிப்பு தீர்மானம்: இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.