திருவாரூர், மே 1: திருவாரூர் அருகே அம்மையப்பன் என்ற இடத்தில் பொதுமக்களை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்மையப்பன் பகுதியில் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதம் கொண்டு இளைஞர்கள் சிலர் அங்குள்ள கடைகள் மற்றும் பொது மக்களை மிரட்டி வருவதாக மாவட்ட எஸ்பி ஜெயக்குமாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் இரவு நேரங்களில் கூடுதலான அளவில் போலீசாரை கொண்டு ரோந்து பணியில் ஈடுபடுமாறு கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் செல்விக்கு எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி கூடுதலான அளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அங்குள்ள பானிபூரி கடை ஒன்றில் 2 இளைஞர்கள் வீச்சரிவால் கொண்டு கடை உரிமையாளர் திருப்பதி என்பவரை மிரட்டியது தெரிய வந்தது.
இதுதொடர்பாக திருப்பதி அளித்த புகாரின் பேரில் அம்மையப்பன் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன் சிவனேசன் (30) மற்றும் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மகேஸ்வரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோல் கூத்தாநல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தை அம்மையப்பன் பஸ் நிறுத்தம் அருகே வழிமறித்து இளைஞர் ஒருவர் கூர்மையான கத்தி மூலம் பேருந்தில் இருந்த டிரைவர் மற்றும் பயணிகளை மிரட்டியது தொடர்பாக பேருந்து உரிமையாளர் பொதக்குடியை சேர்ந்த முகம்மதுதயார் என்பவர் அளித்த புகாரின்பேரில் அம்மையப்பன் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரஜினி மகன் ராம்கி (24) என்பவரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரும் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நாகை கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த கொரடாச்சேரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டியுள்ளார். மேலும் இதேபோன்று மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
The post திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர ஆயுதங்களை காட்டி மக்களை மிரட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.