சென்னை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தின திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.
* செல்வபெருந்தகை (காங்கிரஸ் தலைவர்): நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பாஜ அரசு நிறைவேற்றியுள்ளது. தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்.
* ராமதாஸ்(பாமக நிறுவனர்): உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
* வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்): 18வது மக்களவை தேர்தலில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றிய பாஜ அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றுவதற்கு உறுதி கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைப் பதாகையை உயர்த்திப் பிடிக்க மே நாளில் உறுதி ஏற்போம்.
* முத்தரசன்(சிபிஐ மாநில செயலாளர்): வகுப்புவாத, பாசிச சக்திகளை தோற்கடிப்போம். ஒருங்கிணைந்த மக்கள் நல்வாழ்வு கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்துவோம் என உலக தொழிலாளர் தினத்தில் உறுதி ஏற்போம்.
* விசிக தலைவர் திருமாவளவன்: மோடி தலைமையிலான சங்பரிவார் அரசு, தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்கும் வகையில் ஏற்கனவே நடைமுறையிலிருந்த 44 தொழிலாளர் சட்டங்களையும் மாற்றி 4 சட்டங்களாக தொகுத்துள்ளது. இது எட்டு மணி நேர வேலை என்னும் உரிமையைப் பறிக்கிறது. ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்துகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு நேரெதிராக மோடி அரசு பாசிசப் போக்கில் இச்சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிராக வெகுமக்களைத் திரட்டிக் களமாடுவோம். அம்பேத்கர் வகுத்தளித்த தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க, தொழிலாளர் விரோத பாசிச மோடி அரசை வீழ்த்திட இந்நாளில் உறுதியேற்போம்.
* எம்.எச்.ஜவாஹிருல்லா(மமக தலைவர்): அனைத்து தொழிலாளிகளும் வறுமையை ஒழித்து எல்லோருக்கும் நல் வாழ்வு கிடைக்க வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன். சுரண்டலற்ற, சாதிமத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம்.
* அன்புமணி(பாமக தலைவர்): உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
* பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): வறுமையை ஒழித்து, எல்லாருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம். ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தேமுதிக சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
* ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): ஒன்றிய, மாநில அரசுகள் மே தினத்தை கொண்டாடும் வேளையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மே தினத்தின் உரிமையே தொழிலாளர்களை வாழ வைத்து, அதன் மூலம் தொழில்கள் பெருகி, மாநிலமும், நாடும் முன்னேற வேண்டும் என்பது தான்.
* டிடிவி தினகரன்(அமமுக பொதுச்செயலாளர்): உழைப்பே உயர்வை தரும், உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும் என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்.
* அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த், வி.கே.சசிகலா, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மண்பாண்ட தொழிலாளர்கள்(குலாளர்) சங்கம் தலைவர் சே.மநாராயணன், கோகுல மக்கள் கட்சிதலைவர் எம்.வி.சேகர், நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன், விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post உழைப்பாளர் தினம்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.