×

ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்


சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளதால், அங்குள்ள பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையின் முக்கிய பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 695 பேருந்துகள் 70 வழித்தடங்கள் வீதம், நாளொன்றுக்கு 3,872 சேவை இயக்கப்படுகிறது. பிராட்வே பகுதியில் சென்னை உயர் நீதிமன்றம், கடற்கரை ரயில் நிலையம், குறளகம், மெட்ரோ ரயில் நிலையம், துறைமுகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காய்கறி மற்றும் பூ மார்க்கெட் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இதனால் மக்கள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து மிகுந்து காணப்படுவது வழக்கம். மேலும் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளதால் இங்கு பணியில் உள்ள வழக்கறிஞர்கள், ஊழியர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வந்து செல்பவர்களால் இப்பகுதி எப்போதும் நெரிசலாக காணப்படும். எனவே, அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் சென்னை மாநராட்சி சார்பில், ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் எனவும், இதற்காக ரூ823 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

அதன்படி பிராட்வே பேருந்து நிலையத்தில் முதல் முறையாக 9.98 லட்சம் சதுர அடியில், ரூ823 கோடி செலவில் 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் மற்றும் ஒரே நேரத்தில் 100 பேருந்துகள், 3,500க்கும் மேற்பட்ட இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதில் மாநகர பேருந்துகள், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையம் ஆகிய போக்குவரத்து அம்சங்களையும் முழுமையாக ஒருங்கிணைத்து விரிவுபடுத்தப்படுகிறது. சர்வதேச தரத்தில் அமையவிருக்கும் இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், இந்த வசதிகள் அனைத்தும் உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம் மற்றும் பிராட்வே பஸ் டெர்மினலை ஒருங்கிணைத்து அமைக்கப்படுகிறது.

குறிப்பாக, பேருந்துகளை நிறுத்துவதற்கு கீழ் தளம் மற்றும் தரை தளம் என 2 தளங்களில் 53 மற்றும் 44 பேருந்துகளை நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. அதைப்போன்று 2வது தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்தங்களும் அமைக்கப்படுகிறது. இவ்வாறு வாகன நிறுத்தம் அமைய உள்ள நிலையில் அதிக மக்கள் வந்து செல்வார்கள் என்பதால் வருவாய் ஈட்டும் வகையில் 10 தளங்களில் வணிக வளாகமும் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து பேருந்து இயக்குவதின் மூலம் வருவாய் குறைவாக இருப்பதால் வாகன நிறுத்துவதற்கான கட்டணம் மற்றும் வணிக வளாகத்தின் வாடகை என மற்றவை மூலம் வருவாய் பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலில் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன. அதேபோல், இந்த பேருந்து நிலையம் அருகே உள்ள குறளகம் கட்டிடமும் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதுதவிர, பிராட்வேயிலிருந்து மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையிலான நடைமேம்பாலமும் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம் appeared first on Dinakaran.

Tags : Broadway ,bus ,station ,CHENNAI ,Broadway Bus Stand ,Island Road ,Broadway Bus Station ,Island ,Kuralakam ,commercial ,Dinakaran ,
× RELATED பேருந்திற்காக நின்று கொண்டிருந்த...