சுரண்டை, மே1: சுரண்டையில் எஸ்பிஐ ஏடிஎம்மில் நள்ளிரவில் மர்மநபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், லாக்கரை திறக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் கொள்ளையில் இருந்து தப்பியது. தென்காசி மாவட்டம், சுரண்டை பஸ் நிலையம் பின்புறம் தனியார் வணிகவளாகத்தில் எஸ்பிஐ சார்பில் அமைக்கப்பட்ட ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இங்கு காவலர் யாரும் நியமிக்கப்படவில்லை. இதை நோட்டமிட்டு அறிந்துக்கொண்ட மர்மநபர், நேற்று முன்தினம் இரவு இங்கு வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். ஏடிஎம்மில் இருந்த இருந்த பணத்தை கொள்ளையடிக்கும் பொருட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தபோதும் ஏடிஎம்மின் லாக்கர் திறக்கவில்லை. அத்துடன் அபாய அலாரமும் தொடர்ந்து ஒலித்தது. இதையடுத்து மர்மநபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த சுரண்டை போலீசார் சிசிடிவி கேமராவை கண்காணித்து குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். லாக்கரை மர்மநபரால் திறக்க முடியாததால் பல லட்சம் ரூபாய் கொள்ளையில் இருந்து தப்பியது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இருப்பினும் இதுகுறித்து மேலும் நேற்று மாலை வரை வங்கி தரப்பில் இருந்து எந்த விதமான புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post சுரண்டையில் நள்ளிரவில் மர்மநபர் துணிகரம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.