கோவை: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி உட்பட 316 பேரிடம் இதுவரை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் டிரைவர் ரமேஷ், காய்கறிகளை கொடுத்து வந்த தேவன், கோவையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல்காதர் ஆகிய 4 பேரை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை தொடர்ந்து 4 பேரும் நேற்று காலை 10 மணி அளவில் கோவை பிஆர்எஸ் மைதானத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்கள்.
இவர்களில் ரமேஷ், தேவன் ஆகியோர் எஸ்டேட்டில் வேலை செய்துள்ளதால், கொடநாடு எஸ்டேட்டிற்கு யார் யார் வந்து சென்றார்கள்?, கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தில் எங்கே இருந்தீர்கள்?, இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என பல்வேறு கேள்விகளை கேட்டனர். கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு முன்னர் அங்கே வந்து சென்ற அரசியல் கட்சியினர்,
அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்தனர். டிரைவர் ரமேஷ் வாகனங்களில் யாரை, எங்கெல்லாம் அழைத்து சென்றார்?, பங்களாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் யார்? என்பது குறித்து போலீசார் அதிக நேரம் விசாரித்தனர். இதனை போலீசார் வீடியோ பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்பாக மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவையில் 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை: மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப முடிவு appeared first on Dinakaran.