×

தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச வேண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1ம் தேதி நடத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தமிழ்நாட்டில் அண்மையில் காலியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலை, நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன் இணைத்து ஜூன் 1ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாகும் என்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இது சரியான நேரம் அல்ல.

ஜூன் 1ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், மனு தாக்கல் மே 7ம் தேதி தொடங்கப்பட வேண்டும். தேர்தலுக்கான ஆயத்த பணிகள் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது.

மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்குவதாகவும், 116 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பரப்புரை மேற்கொண்டால் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்ப தசை வலிப்பு, தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இவற்றை விட கொடிய வெப்ப மயக்க நோய் ஏற்பட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக கடந்த ஏப்ரல் 8ம்தேதி தான் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தினால் போதுமானது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக தீர்மானிக்கக் கூடாது. தமிழக அரசு மற்றும் கட்சிகளுடன் கலந்துபேசி தீர்மானிக்க வேண்டும். ஜூன் 1ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்திருந்தால், அந்த முடிவை கைவிட வேண்டும்.

The post தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச வேண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1ம் தேதி நடத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Vikravandi ,Ramadas ,CHENNAI ,Twitter ,PAMAK ,Election Commission ,Assembly ,Tamil Nadu ,Ramadas' ,Dinakaran ,
× RELATED மலைச்சரிவுகளைத் தடுத்து மக்களைக்...