சென்னை: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் புகழேந்தி. இவர் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். 71 வயதான புகழேந்தி உடல்நலக்குறைவால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 5ம் தேதி விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பிரசார கூட்டத்தில் பங்கேற்ற புகழேந்தி எம்எல்ஏ திடீரென மயங்கி விழுந்தார்.இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏப்ரல் 6ம் தேதி காலை உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவை தொடர்ந்து கடந்த மாதம் 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதில் கடந்த மாதம் 19ம் தேதி முதல் கட்டத்திலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும் 5 கட்ட தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில் 7வது கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. இந்த இறுதிக்கட்ட தேர்தலின்போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரத்தில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? இந்த வாரம் அறிவிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.