×
Saravana Stores

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு சர்வதேச மையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்கு சொந்தமானது.

150 ஆண்டு புராதன பகுதியான இங்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதலை அரசு பெறவில்லை. அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள பக்தர்கள் விரும்பவில்லை. அப்பகுதியை ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை என்பதால் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

தமிழக அரசுத்தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, வள்ளலார் சர்வதேச மையம், பிரதான கோயிலுக்கு அருகில் அமையவில்லை. ரூ.99.90 கோடி செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சொத்து கோயிலுக்கு சொந்தமானதாகவே இருக்கும்.

பெருவெளி பகுதியான 71 ஏக்கரில் மூன்று ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தொல்லியல் துறை ஆய்வில் சில தொன்மையான படிமங்கள் கிடைத்ததால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொல்லியல் துறை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது பாதுகாக்கப்படும். பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

வழக்கு தொடர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றார். இதையடுத்து, நிபுணர் குழு அறிக்கை அளிக்க 3, 4 வாரங்கள் வரை ஆகலாம் என்பதால் கட்டுமானப் பணிகளை ஏன் நிறுத்தி வைக்க கூடாது என்று நீதிபதிகள் அரசுத்தரப்பை கேட்ட போது, பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை மே 10க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு சர்வதேச மையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Vadalur Vallalar ,Sathyajna Sabha ,International Centre ,ICourt ,CHENNAI ,Chennai High Court ,Vallalar International Center ,Peruveli ,Vadalur Vallalar Satyagna Sabha ,R. Mahadevan ,Vadalur Vallalar Satyagnana Sabha ,Dinakaran ,
× RELATED வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது