×

பெரியபாளையம் அருகே மூடிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே மூடி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு உருக்காலை பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்குள் பல்வேறு கழிவு பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று திடீரென கழிவு பொருட்களில் தீப் பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு கரும்புகையுடன் எரிந்தது.

தீ விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டினர். கோடை வெயில் ஒருபுறம் சுட்டெரித்து வரும் சூழலில் தீப் பிழம்புகளின் வெப்பமும் சேர்ந்ததையடுத்து தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது.
பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலை என்பதால், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மட்டுமே அங்குள்ளதால் யாருக்கும் தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெரியபாளையம் அருகே மூடிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Siruvapuri ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் அருகே ஏகாத்தம்மன்...