×

உலக கோப்பை டி20 தொடர்: இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்

* சாம்சன், பன்ட், துபே தேர்வு
* ராகுல் இல்லை

புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. அணிகளை அறிவிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உலக கோப்பையில் களமிறங்க உள்ள இந்திய அணி வீரர்கள் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டது. ரோகித் ஷர்மா தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்தனர். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படவில்லை.

அதே சமயம், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன், ரிஷப் பன்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாம்சன், துபே முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சமீபத்தில் விளையாடிய சர்வதேச டி20 தொடர்களில் இடம் பெறாத சுழற்பந்துவீச்சாளர் யஜ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் குல்தீப், ஜடேஜா, அக்சர் ஆகியோரும் சுழல் கூட்டணி அமைத்துள்ளனர். வேகப் பந்துவீச்சுக்கு பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் பொறுப்பேற்கின்றனர். முன்வரிசை பேட்ஸ்மேன்களாக ரோகித், ஜெய்ஸ்வால், கோஹ்லி, சூரியகுமார் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறப்பான பார்மில் இருந்தும் ஆர்.அஷ்வின், தினேஷ் கார்த்திக், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், ஷாருக் கான் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழக ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது. அடுத்து பாகிஸ்தான் (ஜூன் 9), அமெரிக்கா (ஜூன் 12), கனடா (ஜூன் 15) அணிகளின் சவாலை சந்திக்கிறது.

The post உலக கோப்பை டி20 தொடர்: இந்திய அணிக்கு ரோகித் கேப்டன் appeared first on Dinakaran.

Tags : World Cup T20 Series ,Rohit ,Samson ,Pant ,Dubey ,Rahul ,Delhi ,Indian ,ICC World Cup T20 ,KL Rahul ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED இந்திய அணியில் அனைத்து...