சென்னை: உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த இளைஞரின் தாய், தந்தையிடம் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டுள்ளார். அரசு சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
புதுச்சேரி மாநிலம் திருவள்ளூர் நகர் புதுப்பாளையம் வீதியைச் சேர்ந்தவர் ஹேமச் சந்திரன் ( 26 ). 156 கிலோ உடல் எடை கொண்ட ஹேமச்சந்திரன், தனது உடல் எடையை குறைக்க பல வகையில் முயற்சி செய்துவந்துள்ளார். இதற்கிடையே, உடல் எடையை குறைப்பது குறித்து சென்னை தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் யூடியூப்பில் பேசிய வீடியோவை பார்த்து அவரிடம் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ரூ.4 லட்சம் செலவில் உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை பம்மலில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளலாம் என டாக்டர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 23-ம் தேதி காலையில் அறுவை சிகிச்சை தொடங்கிய 45 நிமிடங்களில் ஹேமச் சந்திரன் உயிரிழந்து விட்டதாக பெற்றோரிடம் டாக்டர் தெரிவித்துள்ளார். ஹேமச்சந்திரனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில் அதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவில்லை மற்றும் உடலில் மயக்க மருந்து செலுத்துவதற்கு முன் மேற்கொள்ளப்படும் எந்த பரிசோதனையும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹேமச்சந்திரன் உயிரிழப்பு குறித்து, மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்கம் (டிஎம்எஸ்) விசாரணையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, 2 இணை இயக்குநர்கள், மற்றும் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் விசாரணை பம்மலில் நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாவது நாளாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் உயிரிழந்த ஹேமச்சந்திரனின் தாய், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.
அப்போது ஹேமச்சந்திரனின் தந்தை துரை செல்வம், சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கத்திடம் வழங்கினார்.
The post உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த இளைஞரின் தாய், தந்தையிடம் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை appeared first on Dinakaran.