×

தசரா- திரை விமர்சனம்

அரசியல் செல்வாக்கு படைத்த சிலரால், மக்களின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பது ஒன்லைன். நிலக்கரிச் சுரங்கத்துக்கு அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பாமர மக்கள், அங்குள்ள சில்க் ஸ்மிதா மதுக்கடையை தங்கள் உயிராக மதிக்கின்றனர். 24 மணி நேரமும் குடித்துக்கொண்டே இருப்பதுதான் அவர்களுக்கு வேலை. இதனால் அவர்களது குடும்பம் வறுமையில் தவிக்கிறது.

மதுக்கடை முதலாளி மீது மக்களுக்கு மிகப்ெபரிய மரியாதை இருக்கிறது. அப்போது அரசாங்கம், மது ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மதுக்கடைகளை மூடுகிறது. சமுத்திரக்கனியும், அவரது மகன் ஷைன் டாம் சாக்கோவும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் மதுக்கடையை திறந்து மக்களின் மரியாதையைப் பெறுகின்றனர். குடியைத் தவிர வேறெதையும் யோசித்துப் பார்க்காத நானி, சிறுவயதிலிருந்தே கீர்த்தி சுரேஷைக் காதலிக்கிறார். ஆனால், நானியின் நண்பர் தீக்‌ஷித் ஷெட்டியும், கீர்த்தி சுரேஷூம் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.

இதையறிந்து நட்புக்காக தன் காதலை விட்டுக்கொடுக்கும் நானி, கீர்த்தி சுரேஷுக்கு அவரது குடும்பத்தார் வேறு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து, தனது நண்பனுக்கு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து வைக்கிறார். இந்நிலையில், பூர்ணாவின் கணவர் ஷைன் டாம் சாக்கோ, கீர்த்தி சுரேஷை அடைய முயற்சிக்கிறார்.

அதற்குத் தடையாக இருக்கும் தீக்‌ஷித் ஷெட்டியைத் தீர்த்துக்கட்டுகிறார். அப்போது கிராமத்துக்கு வரும் போலீஸ் படை, நானி மற்றும் மக்களைக் கைது செய்கிறது. சாய்குமார் அவர்களைக் காப்பாற்றுகிறார். அடுத்த தேர்தலில் சாய்குமார் வெற்றிபெற நானி உதவுகிறார். இதனால், ஷைன் டாம் சாக்கோவின் தீராத பகைக்கு ஆளாகும் நானி, கீர்த்தி சுரேஷை அவரது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்கிறார். அப்போது தசரா பண்டிகை வருகிறது. அங்கு யாரை, யார் வதம் செய்தது என்பது மீதி கதை.
நானியின் திரைப்பட வாழ்க்கையில் இது திருப்புமுனை படம் என்று சொல்லலாம்.

காட்சிக்குக் காட்சி இயல்பான நடிப்பிலும், ஆக்‌ஷனிலும், நடனத்திலும் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். டீச்சராக வரும் கீர்த்தி சுரேஷ், நடிப்பில் தனி முத்திரை பதித்துள்ளார். சமுத்திரக்கனி, பூர்ணா வீணடிக்கப்பட்டுள்ளனர். சைக்கோ வில்லன் ஷைன் டாம் சாக்கோவும், நானியின் நண்பர் தீக்‌ஷித் ஷெட்டியும் நடிப்பில் கவனிக்க வைத்துள்ளனர். மற்றவர்கள் எல்லாம் தெலுங்கு முகங்கள்.

லாஜிக்கே இல்லாமல் படத்தை இயக்கியுள்ளார், காந்த் ஒதெலா. படம் முழுக்க ரத்த ஆறு ஓடினாலும், கிளைமாக்ஸ் சபாஷ் சொல்ல வைக்கிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிகப்பெரிய பலம். சத்யன் சூரியன் கேமரா, கதையை விறுவிறுப்பாக நடத்த உதவியிருக்கிறது. ‘நானியின் முதல் பான் இந்தியா படம்’ என்று, தெலுங்கு படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்துள்ளனர். வசனங்களை மாற்றியவர்கள், காட்சிகளின் பின்புலத்தை அப்படியே விட்டுவிட்டதால், இது நேரடி தெலுங்கு படம் என்ற உணர்வே ஏற்படுகிறது. ‘கேஜிஎஃப்’ படங்களின் பாதிப்பில் இருந்து மற்ற படவுலகம் எப்போது மீளும் என்ற கேள்வியை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

Tags : Silk Smitha bar ,
× RELATED யுவன் சங்கர் ராஜாவின் மணி இன் தி பேங்க்