டெல்லி : தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி. ராஜூவுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வாழ்க்கை மற்றும் சுதந்திரம் எப்போதுமே மிகவும் முக்கியம். அதனை நீங்கள் ஒருபோதும் மறுக்க முடியாது என்று குறிப்பிட்டனர்.தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில், “டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கையில் 99% உண்மைத்தன்மை கிடையாது,”இவ்வாறு வாதிடப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது,”தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம். கெஜ்ரிவால் மீதான வழக்கில் சொத்து முடக்கம் போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,”இவ்வாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மே 3ம் தேதி வழக்கின் அடுத்த விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post தேர்தலுக்கு முன் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?.. விசாரணை தொடங்கியதற்கும் கைது நடவடிக்கைக்கும் இடைவெளி அதிகம் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.