சென்னை: தொழிலளார்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 138 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இதே மே 1 ஆம் தேதி ஆர்ப்பரித்தனர். அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறையால் தொழிலாளர் தலைவர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் நலச் சட்டங்களை அகற்றிவிட்டு, தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் புதிய தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க.வின் தொழிலாளர் விரோத போக்கு இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொருளாதார தேக்க நிலையினால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி குறைந்து, வேலை வாய்ப்பு இழந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் நிவாரண தொகை வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உண்டு. ஆனால், நிவாரணத் தொகை வழங்காமல் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிற வகையில் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகிறது. இதை நிறைவேற்றுகிற வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது.
எனவே பணமதிப்பிழப்பு, பொருத்தமற்ற சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களால் தொழில் வளர்ச்சி இல்லாத நிலையில் தொழிலாளர்கள் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். தொழிலளார்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தொழிலளார்கள் உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1ம் தேதி அமைய வேண்டும்: செல்வப்பெருந்தகை வாழ்த்து!! appeared first on Dinakaran.