×

மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டெல்லி : தவறான விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தவறான விளம்பரங்கள் மூலம் பொது மக்களை பதஞ்சலி நிறுவனம் ஏமாற்றுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், அந்த நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தது. இந்த வழக்கில் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வாயிலாக பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கேட்டதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பால கிருஷ்ணா நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தது.இதையடுத்து அவர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். ஆனால் இருவரின் மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதிகள், பத்திரிகை வாயிலாக பொது மன்னிப்பு கேட்கவும் உத்தரவிட்டனர். இதனிடையே பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருட்களுக்கு தடை விதித்துள்ளதாக உத்தராகண்ட் அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அசலை தாக்கல் செய்ய உத்தரவு

இதைத் தொடர்ந்து வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராகி தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களின் நகலை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள்,”மன்னிப்பு கோரி நாளிதழ்களில் தந்த விளம்பரங்களின் விவரத்தை ஏன் முழுமையாக தாக்கல் செய்யவில்லை?. மன்னிப்பு பற்றிய அசல் ஆவணங்களை, விளம்பர ஆவணங்களை தாக்கல் செய்ய கூறியும் ஏன் நகல் தாக்கல் செய்துள்ளீர்கள்?. நீங்கள் இணையம் மூலம் பதிவேற்றம் செய்ததால் உச்சநீதிமன்ற பதிவுத்துறை நகல்களை சமர்பித்துள்ளது.நீங்கள் செய்வது சரியல்ல, நீதிமன்றம் என்ன கோரியதோ அதனையே தாக்கல் செய்ய வேண்டும்,”என்று தெரிவித்தனர்.

நேரில் ஆஜராவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு

மேலும், இந்த வழக்கில் உத்தரகண்ட் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்துக்கு மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்பும், பின்பும் பதஞ்சலி நிறுவனத்தின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருத்தி தாக்கல் செய்ய 10 நாள்கள் நீதிபதிகள் அவகாசம் அளித்தனர்.இதையடுத்து வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணாவுக்கு விலக்கு அளித்தனர்.

The post மன்னிப்பு கோரி நாளிதழ்களில் வெளியிட்ட விளம்பரங்களின் அசலை தாக்கல் செய்ய பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Patanjali Company ,Delhi ,Patanjali ,Commodity Company ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...