புதுச்சேரி: புதுச்சேரியில் நிதி நிறுவன அலுவலகத்தை எம்எல்ஏ தலைமையில் மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். உருளையன்பேட்டை பகுதிக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் பிரபல நிதி நிறுவனத்திடம் செல்போன் வாங்குவதற்காக கடன் பெற்றுள்ளார். அவர் 90 சதவீத பணத்தை செலுத்தி உள்ளார். இந்த நிலையில் அவருக்கு அந்த நிதி நிறுவனத்திலிருந்து பணம் கட்ட வேண்டும் என தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த நிறுவனத்திலிருந்து பேசிய ஒரு அதிகாரி சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்.
உங்களுக்கு பிடிவாரண்ட் வந்துள்ளது உடனடியாக வரவேண்டும் என்று அவரை வற்புறுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த பெண் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் நேருவை சந்தித்து முறையிட்டார். எம்எல்ஏ நேரு அந்த நிர்வாகத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய போது அந்த பெண்ணுக்கு பிடிவாரண்ட் வந்துள்ளது. நாங்கள் சென்னை காவல் நிலையத்தில் உள்ளோம் உடனடியாக பணத்தை கட்டவேண்டும் இல்லை என்றால் அவரை சரண்டர் செய்யுங்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து விசாரித்த போது பேசிய நபர் நிதி நிறுவனத்தின் அதிகாரி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நிதி நிறுவன அலுவலகத்திற்கு சுயேச்சை எம்எல்ஏ நேருவுடன் பொதுமக்கள் அனைவரும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசாரின் தடுப்பை மீறி நிதி நிறுவனத்திற்கு உள்ளே சென்ற போது காவலாளி அந்த நிதி நிறுவனத்தை பூட்ட முற்பட்டார். அவரை பிடித்து தள்ளிவிட்டு உடனடியாக உள்ளே சென்ற அவர்கள் வளாகத்தை அடித்து சூறையாடினர்.
தொடர்ந்து உடனடியாக உள்ளே வந்த போலீசார் அவர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு அடைந்ததை தொடர்ந்து போலீசார் தற்போது அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.மேலும் நிதி நிறுவன அதிகாரிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இந்த புகாரை தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post புதுச்சேரியில் பிரபல நிதி நிறுவன அலுவலகத்தை சுயேச்சை எம்எல்ஏ தலைமையில் முற்றுகையிட்ட மக்கள்: அலுவலகத்தை அடித்து உடைத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.