×
Saravana Stores

சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல் நலனை பாதுகாக்க அடர் தீவனங்கள் அவசியம்: கால்நடைகளை பராமரிக்க டிப்ஸ்

திண்டுக்கல்: கோடை காலங்களில், வெயில் கொளுத்தும் நேரத்தில் கால்நடைகளை பராமரிப்பது குறித்து கால்நடை பராமரிப்பு துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெப்பத்தின் தாக்கத்தால் கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை பசுக்களில் ஏற்படும் உடல் அயற்சியை தடுக்க மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையிலும் என மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். கோடையில் பால் உற்பத்தியும், சினை மாடுகளில் கன்று வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க போதுமான அளவு பசுந்தீவனம் மற்றும் பசும்புல் வழங்க வேண்டும். மதிய வேளையில் பசுக்களை குளிப்பாட்டுவதன் மூலமும் உடல் வெப்பத்தை தணித்து பால் உற்பத்தி குறையாமல் பாதுகாக்கலாம். உலோகம், கல்நார் மற்றும் கான்கிரீட் கொட்டகையில் வெப்பத்தை தணிக்க கொட்டகையின் மேல்புறத்தில் தென்னங் கீற்றுகள், பனை ஓலைகள், ஈரப்படுத்தப்பட்ட சாக்கு துணிகள், விரைவாய் வளரும் பசுங்கொடிகள் ஆகியவற்றை பரவ விடுதல் வேண்டும்.

மேலும் அவற்றில் அவ்வப்போது தண்ணீர் தெளிப்பது அவசியம். அயற்சியை போக்க குளிர்ந்த குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கும் குடிநீரில் தாது உப்பு மற்றும் வைட்டமின் டானிக் கலந்து கொடுக்க வேண்டும். கோடைகாலத்தில் 3 முறை தண்ணீர் வழங்குதல் அவசியம். மேலும், கோடை காலத்தில் மடி வீக்க நோய் மற்றும் பிற கிருமி தொற்றுகள் வராமல் தடுக்க பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஒரு சதவீதம் கரைசலை பயன்படுத்தி கொட்டகை மற்றும் மாட்டின் மடியை கழுவி தூய்மை செய்ய வேண்டும். கொட்டகை இல்லாதவர்கள் கால்நடைகளை வெயிலில் கட்டாமல் நிழல் தரும் மரங்களின் கீழ் கட்ட வேண்டும். பால் உற்பத்தி குறையாமல் இருக்க போதுமான அளவு அடர் தீவனம் கொடுக்க வேண்டும். குறிப்பாக 3 லிட்டர் கறக்கும் கறவைப் பசு ஒன்றிற்கு 2 கிலோ அடர் தீவனம் வழங்க வேண்டும்.

நார்சத்து நிறைந்த தீவனங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வழங்க வேண்டும். அதிக வெப்பத்தால் கோழிகளுக்கும் வெப்ப அயற்சி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க வைட்டமின் சி மற்றும் நுண்ணூட்டம் நிறைந்த தண்ணீரை கோழிகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும் பசுவினங்களில் கோமாரி நோய், தோல் கழலை நோய் மற்றும் ஆடுகளில் ஆட்டுக் கொல்லி நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உண்ணிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும் பட்சத்தில் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம். வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல், அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், தோல் பொழிவுத் தன்மையை இழத்தல், மூச்சு இரைப்பு, பாலில் திடத் தன்மை உற்பத்தி திறன் குறைதல், திடீரென மயங்கி விழுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சை வழங்க வேண்டும்.

வெப்ப அயற்சி நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவியாக பாதிக்கப்பட்ட கால்நடைகளை நிழற் பாங்கான பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும். நனைந்த துணிகளை கால்நடைகளின் உடலில் சுற்றிவிட வேண்டும். குளிர்ந்த எலெக்ட்ரோலைட் நிறைந்த குடிநீரை பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், ஒரே இடத்தில் அளவுக்கு அதிகமான கால்நடைகளை பராமரிப்பதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கால்நடை மருத்துவரை அழைத்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரை 9445001114 என்ற எண்ணிலும், கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநரை 9445032520 என்ற எண்ணிலும், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநரை 9445032608 என்ற எண்ணிலும், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்களை (திண்டுக்கல், பழநி, கொடைக்கானல்) 9445032585, 9445001208, 9445032595 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல் நலனை பாதுகாக்க அடர் தீவனங்கள் அவசியம்: கால்நடைகளை பராமரிக்க டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Animal Husbandry Department ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...